
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற ஜப்பானின் அய்ச்சி மாகாணம் மற்றும் நகோயாவில் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. வருகிற 18-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 275 பேர் கொண்ட அணிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய அணியில் 111 வீரர்களும், 55 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்கள், உதவிப் பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் அதிகாரிகளும் செல்கின்றனர். மொத்தம் 10 விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. சீனா முதலிடத்தையும், ஜப்பான் மற்றும் தென்கொரியா அடுத்த இடங்களையும் பிடித்தன.
இந்த நிலையில், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் எத்தனை பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடல் சவால்களைத் தாண்டி, தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ஆயுதமாகக் கொண்டு களமிறங்கும் இந்த வீரர்களின் ஒவ்வொரு முயற்சியும், இந்திய மூவர்ணக் கொடியை உயர்த்த வேண்டும் என்ற அவர்களின் கனவு ஒன்றுதான். பதக்கங்கள் மட்டுமல்ல, அவர்களின் போராட்டமும் சாதனையும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உத்வேகமாக அமையும் என்பது மிகையாகாது.
