குன்றத்தூரில் கடந்த 2018ஆம் ஆண்டு தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என அபிராமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அபிராமி தரப்பில், குற்றச்சம்பவத்துடன் தன்னை நேரடியாக தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் இல்லை என வாதிடப்பட்டது. ஆனால், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பால் கசப்பாக இருந்ததாக அபிராமியின் கணவர் அளித்த சாட்சியத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
வழக்கில் உள்ள ஆதாரங்களை பார்க்கும்போது, தற்போதைய நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்க இது தகுதியான வழக்கு அல்ல என கூறிய நீதிபதிகள், அபிராமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், அபிராமியின் பிரதான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 4ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
