
கேரளாவின் கொச்சி விமான நிலையம் அருகே நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 3 இளம் வயதினர் உயிரிழந்தனர்.
நெடும்பாசேரி பகுதியில் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார், ஸ்கூட்டரில் சென்ற 3 பேர் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஸ்கூட்டர் சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வயநாட்டைச் சேர்ந்த தேவிகா, பாலக்காட்டைச் சேர்ந்த கோபிகா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த இயாஸ் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். மூவரும் திருக்காக்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரை ஓட்டி வந்த 19 வயது இளைஞர் சுஹைல் சஜீவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் காரில் இருந்த நண்பரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
