தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துவதற்காகத் தேனி விரைந்துள்ளார்.
திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், தப்பியோடிய கைதிகளில் நான்கு பேரைப் போலீஸார் பிடித்துள்ளனர். எஞ்சிய கைதிகளைப் பிடிப்பதற்காகத் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரும் தேனியில் முகாமிட்டு, தனிப்படை போலீஸாருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சிறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், கைதிகள் தப்பியதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தவும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தேனி சிறைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே, சிறையில் பாதுகாப்புப் பணியில் போதிய காவலர்கள் இல்லாததும் குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஏழு காவலர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் நான்கு பேர் மட்டுமே இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க தமிழ்நாடு – கேரள எல்லை மற்றும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தனிப்படை போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் கைதிகள் தப்பியதற்கான சூழல்கள் குறித்து டிஜிபி மேற்கொள்ளும் ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
