தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கைது நடவடிக்கையைத் தவிர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கை
உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், அன்பில் மகேஷை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
