நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், நடிகர் தனுஷும் அரசியல் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் என்ற அமைப்பின் பெயர் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என மாற்றப்பட்டது. அப்போது, புதிய சின்னமும் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், டெல்லிக்குச் சென்ற தனுஷ், அங்கு பாஜக தலைவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியதாகவும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரி தனியார் கல்லூரியில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் தனுஷை வரவேற்று பதாகைகள் மற்றும் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதுடன், ஒவ்வொருவருக்கும் வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தனுஷ், மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், மாணவர்கள் நன்றாகப் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின்போது பாடல் ஒன்றையும் பாடிய தனுஷ், இறுதியில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
