
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 10ஆம் தேதி விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஆரம்பத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காயமடைந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்ததால், அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த இந்தியர் ஹைதராபாத்தைச் சேர்ந்த 46 வயதான முகமது யூசுப் என தகவல் வெளியாகியுள்ளது. உம்ரா புனிதப் பயணத்திற்காக குடும்பத்துடன் விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் காயமடைந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அக்டோபர் 11ஆம் தேதி கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 மற்றும் 4 பகுதிகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு ஏமனில் செயல்படும் ஹூதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியாத் விமான நிலையம் மட்டுமின்றி, சவுதியின் தம்மாம் விமான நிலையம் மற்றும் சில முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு இலக்காகியதாக கூறப்படுகிறது.
தொடர் தாக்குதல்களை தொடர்ந்து ரியாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் சேத மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய தூதரகம் தொடர்ந்து அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது.
