ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று 4-வது இடத்தைப் பிடித்தது.இதையடுத்து, பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்களை டெல்லியில் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
அப்போது வீரர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த அவர், இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.வீரர்களிடையே பேசிய பிரதமர், இளம் வயதிலேயே பலர் சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இந்திய வீராங்கனைகள் 38 பதக்கங்களை வென்றதையும், பெண்கள் ஆக்கி அணி தங்கம் வென்று நீண்டகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததையும் பாராட்டினார்.மேலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடாக இந்தியா வளர்ந்து வருவதாகவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், வெற்றியை அடைய நீண்டகால உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்றும் வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
