ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளன. இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.125.25 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் முதல் பாதியில் யோகிபாபு, நமோ நாராயணா உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வரும் இரண்டாம் பாதியில் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியாகி ரசிகர்கள் இடையே ரசிகர்கள் இடையே கலைவையான விமர்சனங்களை பெற்று வரும்நிலையில் ‘ஜெயிலர் 2’ உலகளவில் முதல் நாளில் ரூ.125.25 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, வார இறுதியில் உலகளாவிய வசூல் ரூ.200 கோடியைத் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும், நீண்ட கால ஓட்டத்தில் இப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான விடை, வரும் நாட்களில் கிடைக்கும் திரையரங்கு வரவேற்பு மற்றும் வசூல் நிலவரத்தைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடதக்கது.
