
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்க வந்த பலர் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் காரணமாக மத்திய டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில மெட்ரோ நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ள நிலையில், டெல்லி போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
