டெல்லியில் நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், நாகரிகப் பேச்சுவார்த்தை கருத்தரங்கமும் இடம்பெற உள்ளது. இதில் அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்திருந்தார்.
பாகிஸ்தான் அமைச்சருக்கு அழைப்பு
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க பாகிஸ்தான் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு அனுப்பியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் அரங்க்சிப் கான் கிச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பலதரப்பு அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்க விடுக்கப்படும் அழைப்புக்கும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2023-ஆம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடைபெற்ற எஸ்.சி.ஓ. வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்றிருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் பின்னணி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. தொடர்ந்து, மே 7 முதல் 10-ஆம் தேதி வரை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, பயங்கரவாதக் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற எஸ்.சி.ஓ. கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் கூட்டு நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தினார். மேலும், பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.இந்தச் சூழலில், பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
