
ஐஸ்க்ரீம் அளவுக்கு கெட்டியான தயிரை, இந்தவொரு ட்ரிக் தெரிந்தால் வீட்டிலேயே செய்யலாம். இரண்டே இரண்டு ஸ்பூன் ஒரு மேஜிக் பவுடர் மட்டும்தான் அதற்கு தேவை. அது என்ன தெரியுமா?
என்னதான் வீட்டில் பார்த்து பார்த்து தயிர் உறை ஊற்றினாலும், ஹோட்டலிலோ கடைகளிலோ கிடைப்பது போல கெட்டித்தயிர் வருவதில்லை என்ற வருத்தம் இருக்கிறதா உங்களுக்கு? அப்போ இங்கே சொல்லப்போகும் வழிகளில் தயிரை தயார் செய்யுங்கள். பாத்திரத்தையே கவிழ்த்தாலும் தயிர் கொட்டாது. அவ்வளவு கெட்டியாக இருக்கும்.
முதலில் பாலை காய்ச்ச வேண்டும். அதற்கு முன் பால் காய்ச்சும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை சூடுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த வெந்நீரை தனியே வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பாலை அதேபாத்திரத்தில் காய்ச்சுங்கள். இப்படி செய்யும்போது, பால் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலானது, கெட்டியாக இருப்பது நல்லது. தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நீங்களாக அதில் கூடுதல் தண்ணீர் சேர்க்காதீர்கள்.
இப்போதுதான் அந்த சீக்ரெட். தயிர் கெட்டியாக வர நினைப்பவர்கள், ஒரு பாக்கெட் பால் பவுடரை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு டேபிள்ஸ்பூன் பால்பவுடருக்கு, ஏற்கெனவே நீங்கள் செய்துவைத்த வெந்நீரை (அரை டம்ளர்) சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதுவும் பால் பதத்திற்கு வந்துவிட வேண்டும். பவுடர் திட்டுதிட்டாக இல்லாமல், நன்கு கரைந்துவிட்டதை உறுதிசெய்துக் கொள்ளுங்கள்.
இன்னொருபக்கம், அடுப்பில் பால் நன்கு கொதித்துக் கொண்டிருக்கும். அந்த பால் 2-வது கொதி வரும்போது, அதில் நீங்கள் தயாரித்து வைத்துள்ள பவுடர் பாலை சேர்த்துவிடுங்கள். அப்படியே அடுப்பை அணைத்துவிடுங்கள். தொடர்ந்து, நன்கு கிளறிக்கொள்ளுங்கள்.
கிளறியபின், பால் கலவையை ஆறவிடுங்கள். வெதுவெதுப்பான வெப்பநிலையை பால் கலவை அடைந்தவுடன், ஒரு டம்ளர் அளவில் அந்த பாலை எடுத்து, அதில் கெட்டித் தயிர் ஒரேயொரு ஸ்பூன் சேர்க்கவும். கெட்டித்தயிர் திட்டுதிட்டாக தெரியாதபடி அதனை நன்கு கலக்கி கொள்ளுங்கள். பின், அதனை மொத்த பாலில் சேர்த்து கிளறிக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், அப்படியே அந்த பால் பாத்திரத்தை தனியாக வைத்துவிடுங்கள். பால் பவுடரும் சேர்த்திருப்பதால், வரப்போகும் கெட்டித்தயிர் இனிப்பாக இருக்கும். இந்த இனிப்புக்கு எறும்பு வரலாம் என்பதால், ஒரு தட்டில் தண்ணீர்விட்டு, அதன்மீது உறைதயிர் பாத்திரத்தை மூடி வைக்கலாம். இப்படி செய்தால், 8 மணி நேரத்தில் சுவையான மணமான கெட்டித்தயிர் ரெடி!
