விக்ரம் படம் நடக்காமல் போனதன் பின்னணி என்னவென்று பேட்டியொன்றில் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம் குமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. இடையே விக்ரம் படத்தினை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டப்படி அப்படம் தொடங்கவில்லை. அடுத்ததாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் பிரேம் குமார்.
விக்ரம் படம் நடக்காமல் போனதன் பின்னணி குறித்து பிரேம் குமார் அளித்த பேட்டியொன்றில் விவரித்துள்ளார். அதில், “இதுவரை இயக்கிய படங்கள் அனைத்துக்குமே கதையினை முழுமையாக முடித்துவிட்டு தான் நடிகர்களிடம் எடுத்துச் செல்வேன். அப்படியுமே ‘96’ 2-ம் பாகம் நடக்க முடியாமல் போய்விட்டது. சில காரணங்களால் அது அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
விக்ரம் சாரிடம் போகும் போது நான் கதை எழுதவே இல்லை. என்னிடம் உள்ள 2-3 கதைகளை கூறினேன். ஒரு கதை பிடித்திருந்ததால் பண்ணலாம் என்றார்கள். உடனே அதை எழுதி முடித்தேன். அதை படித்துவிட்டு இது வேண்டாம், இன்னொரு காதல் கதை சொன்னீர்களே, அதை பண்ணலாம் என்றார் விக்ரம் சார். இந்தக் கதை முழுமையாக எழுதிமுடித்து கையில் இருக்கிறது. அந்த காதல் கதையினை எழுத நிறைய நேரம் தேவைப்பட்டது. அதற்கு நிறைய பயணப்பட வேண்டியிருந்தது.
பட்ஜெட்டாகவும் அது ரொம்ப பெரிய படம். ஆகையால் அதை முழுமையாக எழுதி முடித்து கொண்டு செல்ல வேண்டும். முழுமையாக எழுதி முடித்து கொண்டு சென்றால், அது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கதையாக சொல்லி, எழுதி முடித்து கொண்டு செல்லும் போது சில நேரங்களில் பிடிக்காமல் போய்விடுகிறது” என்று தெரிவித்துள்ளார் பிரேம் குமார்.