காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடங்கிய கடந்த 22 மாதத்தில் பாலஸ்தீனர்கள் குறைந்தது 64,905 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு 10,000 பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காசாவில் உணவு பஞ்சம் நிலவுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார். இக்குழு தனது விசாரணையை முடித்து 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என வரையறுக்கப்பட்ட 5 செயல்களில் 4 காசாவில் நடந்துள்ளது. அதாவது, ஒரு குழுவின் (ஹமாஸ்) உறுப்பினர்களைக் கொல்வது, உடல் மற்றும் மன ரீதியில் கடுமையான தீங்கை விளைவிப்பது, குழுவை அழிக்கும் நோக்கில் நிபந்தனைகளை ஏற்படுத்துவது, பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை நிகழ்த்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள், ராணுவத்தின் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், மருத்துவர்கள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள், போர் தொடங்கியதில் இருந்து தொகுக்கப்பட்ட செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவின் இந்த அறிக்கையை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜெனிவானில் உள்ள இஸ்ரேல் தூதர் கூறுகையில், “ஐ.நா. மனித உரிமை ஆணையம் இஸ்ரேலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. இந்த ஆணையத்துக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது” என தெரிவித்துள்ளார்.