சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். இது குறித்து தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
“அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு, வெளியில் சென்றவர்கள், தற்போது எந்த நிபந்தனையும் இல்லாமல், இணையத் தயாராக உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு, வெளியில் சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதோடு, கட்சியில் அமைதியாக இருப்பவர்களை செயல்பட வைக்க வேண்டும். இதில், யார் யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம். இதில், கருத்து வேறுபாடு எனக்கு இல்லை.
மேலும், இதற்கான முயற்சியை 10 நாளில் எடுக்க வேண்டும். கட்சித் தலைமை இதனைச் செய்யவில்லை என்றால், இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, அதற்கான பணிகளை மேற்கொள்வோம். ஒருங்கிணைப்பு தொடர்பான கோரிக்கைக்கு முடிவு வந்தால்தான், பொதுச் செயலாளர் பழனிசாமி நடத்தும் பிரச்சார பயணத்தில் நான் கலந்து கொள்வேன்” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து தலைவர்கள் பலரும் வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பு…
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் பழனிச்சாமி கூறும் கருத்துக்குக் கட்டுப்படுவோம். செங்கோட்டையன் அவரது கருத்தைக் கூறியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் முடிவு எடுப்பார். அவரது முடிவே எங்கள் முடிவு” என்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “கட்சி உருவானதில் இருந்தே அதிமுக தொடர்ச்சியாக 5 முறை தோல்வி கண்டது கிடையாது. அதிமுக பிரிந்து கிடப்பதால்தான், தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொண்டர்களும் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
அதிமுக தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் தொண்டர்களை யாராலும் வெளியேற்ற முடியாது. கழகம் ஒருங்கிணைய வேண்டும். இதற்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மாவட்டச் செயலாளர், தலைமைக்கழகச் செயலாளர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை அவர் வகித்து வருகிறார்.
அதிமுகவுக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது. தொண்டர்களை ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்பவர். செங்கோட்டையன் கருத்து சரிதான். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்தால்தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். அவருடைய எண்ணம் நிறைவேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்களும் அதற்காகத்தான் முயற்சி செய்கிறோம்” என்றார் ஓபிஎஸ்.
சசிகலா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான், ஒவ்வொரு தொண்டர்களின், தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. நானும் இதைத்தான் வலுயுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “செங்கோட்டையன் பேச்சு அதிமுகவின் உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களது கருத்தை அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல விஷயம். அதிமுக இணைப்பு குறித்து பழனிசாமிதான் பேச வேண்டும். தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுவேன்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுத்துவரும் முயற்சி பாராட்டுக்குரியது. அது உட்கட்சி பிரச்சினை என்றாலும், பெரியாரின் இயக்க பாசறையில் உருவான ஒரு அரசியல் இயக்கம் என்பதால், அதிமுக மீது ஒரு மதிப்பு உண்டு. ஆகவேதான் பாஜக, ஆர்எஸ்எஸ் பிடியில் அதிமுக சிக்கி சீரழிந்துவிடக் கூடாது என்ற கவலையை வெளிப்படுத்தி வருகிறோம்.
செங்கோட்டையன் எந்த பின்னணியில் இயங்குகிறார் என்று தெரியாது. இந்தப் பின்னணியி்ல் பாஜகவும் இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவ்வாறு இருக்குமேயானால், அதிமுகவின் எதிர்காலத்துக்கு உகந்ததாக அமையாது. செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு மறைமுகமான நெருக்கடியை பாஜகதான் உருவாக்குகிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
பாஜக எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் இப்படி மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைக்கிறதோ, அந்த மாநிலக் கட்சிகளை மெல்ல மெல்ல நீர்த்துப்போகச் செய்திருக்கிறது என்பதுதான் வரலாறு. அப்படி ஒரு நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் கவலை.
செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. பழைய, மூத்த தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறார், ஆனால், யார் அந்த பழைய தலைவர்கள் என்பதை ஏன் வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறார். அவரது கருத்தால் வரும் தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது” என்றார் திருமாவளவன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், “அதிமுக – பாஜக கூட்டணியை பலரும் ஏற்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தினகரன், ஓபிஎஸ் வெளியேறி விட்டனர். அதிமுக ஒன்றுபட வாய்ப்பில்லை. செங்கோட்டையன் எத்தனை நாள் அவகாசம் தந்தாலும் அதிமுக ஓர் உடைந்த கண்ணாடி. அதை மீண்டும் ஒட்ட வைப்பது மிகவும் கடினம்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது முடியாத காரியம். அது காலம் கடந்து விட்டது. ஓபிஎஸ், டிடிவி. தினகரன், சசிகலாவை ஒன்றிணைத்தால், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பதவிக்கு பிரச்சினை வரும். அதனால் இதை பழனிசாமி ஏற்கமாட்டார். அதிமுக எதிர்காலம் கேள்விக்குறியாகதான் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.