நமது வாழ்க்கையின் இனிமையான நினைவுகள் குறித்துக் கேட்டால், உடனே நம் மனம் பால்ய காலத்தை நோக்கித் தாவும். அதுவே, நம் பள்ளி வாழ்க்கையைக் குறித்துக் கேட்டால்? பரீட்சைகள், குச்சி வைத்திருக்கும் ஆசிரியர்கள், வீட்டுப் பாடங்கள் என்று மிரட்டுவதாகவே இருக்கும்.
ஆனால், தனது பள்ளி, அதன் தலைமையாசிரியர், பள்ளிப் பாடவேளைகள் குறித்து முழுக்க முழுக்க இனிமையான நினைவுகள் நிறைந்த ஒரு நூலை ஒருவர் எழுத முடியுமா? நிச்சயமாக முடியும் எனக் காட்டினார் டெட்சுகோ குரோ யனகி – அது ‘டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி’ என்கிற நூல்.
சு.வள்ளி நாயகம், சொ.பிரபாகரன் மொழிபெயர்ப்பில் முதலில் சவுத் விஷன் வெளியீ டாகவும் பிறகு நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீ டாகவும் வந்தது. மாற்றுக் கல்வி முறைகள் குறித்து தமிழ்நாட்டின் தீவிர செயல்பாட்டாளர்கள் யாரிடமாவது பேச ஆரம்பித்தால், அவர்கள் உச்சரிக்கும் முதல் பெயர் டோட்டோசானாகவே இருக்கும்.
1981இல் ஜப்பானிய மொழியில் வெளியான இந்த நூல் அதற்குப் பிறகு நடைபெற்ற கல்வி குறித்த எல்லா முக்கிய விவாதங்களிலும் இடம்பிடித்த ஒன்று. 30க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில் மட்டும் 80 லட்சம் பிரதிகளும், உலகம் முழுவதும் 2.5 கோடிப் பிரதிகளும் விற்றுள்ளன.
உலக அளவில் தனிநபர் சுயசரிதை அதிகம் விற்றதற்கான கின்னஸ் சாதனையை இந்த நூல் படைத்துள்ளது. இந்த நூலைப் படித்த பிறகு, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான, படைப்பாற்றல் மிக்க ஒரு நட்சத்திரம் என்பதை வளர்ந்தவர்களான பெற்றோரோ, ஆசிரியர்களோ உணர்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.
எல்லாக் குழந்தைகளையும்போல் டோட்டோ சானும் சுட்டித்தனம் செய்யும் ஒரு குழந்தை. அவள் செல்லும் பள்ளிகளில் எல்லாம் படிப்பில் அவளுக்குக் கவனமில்லை, வகுப்பைத் தொந்தரவு செய்கிறாள் என ஆசிரியர்கள் அலுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இது எதற்காகவும் டோட்டோசானின் அம்மா கவலைப்படுவதே இல்லை. ரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட டோமாயி பள்ளியில் கடைசியாகச் சேர்த்துவிடுகிறார்.
அந்தப் பள்ளித் தலைமை யாசிரியர் கோபயாஷி, குழந்தைகளின் மனப் போக்குக்கு ஏற்ப கற்பிப்பதை வலியுறுத்துகிறார். பரந்த உலகின் அனைத்து அம்சங்களையும் மிக இயல்பாக அறிமுகப்படுத்துகிறது அந்தப் பள்ளி. அங்கு வரும் குழந்தைகள் வீட்டுக்குப் போக விரும்புவதே இல்லை.
எந்த வகையிலும் திணிப்புக்கு உள்ளாகாத டோட்டோசான் போன்ற குழந்தைகள், வழக்கமாகக் கற்பனை செய்யப்படாத புதிய வேலைகளில் பிற்காலத்தில் ஜொலிக்கிறார்கள். கெடுவாய்ப்பாக இரண்டாம் உலகப் போரின்போது டோமாயி பள்ளி தகர்க்கப்படுகிறது.
அதற்குப் பிறகு அந்தப் பள்ளியைப் போன்ற ஒன்றை உருவாக்கு வது கனவாகவே தேங்கிவிடுகிறது. அந்தக் கனவுக்குப் புதிய சிறகைக் கொடுத்து, உலகெங்கும் குழந்தைகளையும் கற்பித்தல் முறையையும் மாறுபட்ட வகையில் புரிந்துகொள்ள தூண்டிக்கொண்டே இருக்கிறது டோட்டோசான் நூல்.