சென்னை: பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நாளை தமிழகம் வருகிறார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராகவும், தெலங்கானாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இண்டியா கூட்டணி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கடந்த 24-ம் தேதி சென்னை வந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன், விநாயகர் சதுர்த்தியான நாளை (ஆக.27) சென்னை வர உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து அவர் ஆதரவு கோர உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பழனிசாமி 3 கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். 4-ம் கட்ட பயணத்தை செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறார். இடைப்பட்ட நாட்களில் பழனிசாமியை சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஆதரவு கோருவார் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தொடர்ந்து, பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஆதரவு கோர உள்ளார்.