திருவனந்தபுரம்: நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உட்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, இன்று அவரை இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
மலையாள நடிகையும், முன்னாள் பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ், பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு “இளம் தலைவர்” பலமுறை தனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், தன்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டியதால் இந்த சர்ச்சை வெடித்தது.
ரினி ஆன் ஜார்ஜ் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், பாலக்காட்டில் உள்ள மம்கூத்ததில் அலுவலகத்திற்கு வெளியே பாஜக மற்றும் சிபிஎம் கட்சிகள் போராட்டம் நடத்தின.
இதனையடுத்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், திருநங்கை அவந்திகா ஆகியோரும் ராகுல் மம்கூத்ததில் தங்களுக்கு ஆபாச செய்திகள் அனுப்பியதாகவும், பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.
இதனை தொடர்ந்து, ராகுல் மம்கூத்ததில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்போது அவரது கட்சி பதவியையும் காங்கிரஸ் பறித்துள்ளது.