லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரமானந்த் குப்தா. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவிக்கும் வேறு குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களுக்கும் இடையில் சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 2 சகோதரர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்தார். அவர் சார்பில் பிரமானந்த் குப்தா வாதாடினார்.
முன்னதாக பெண்ணின் புகார் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பிரமானந்த் குப்தா போலியாக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 2 சகோதரர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் இடத்தில் அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அரவிந்த் மிஸ்ரா வாதிடுகையில், ‘‘வழக்கறிஞர் குப்தா ஏற்கெனவே போலி வழக்கு தொடுத்த குற்றத்துக்காக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
எதிர்தரப்பினரை சித்ரவதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணுடன் கூட்டு சேர்ந்து அவர் தொடர்ந்து போலி பாலியல் வழக்குகளை தொடுத்து வந்துள்ளார். இதுபோல் குப்தா போலியாக 18 வழக்குகளும் சம்பந்தப்பட்ட பெண் 11 வழக்குகளும் தொடுத்துள்ளனர். அவை போலியானவை.” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: போலி வழக்குகள் பதிவு செய்து வந்த வழக்கறிஞர் குப்தாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. வழக்கறிஞர் குப்தா தன்னை தவறாக வழிநடத்தியதாக கூறியதால், சம்பந்தப்பட்ட பெண்ணை இந்த நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து விடுவிக்கிறது.
எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் இதுபோல் போலி வழக்குகளை தொடுத்தது தெரிய வந்தால், அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வழக்கறிஞர் குப்தா நீதிமன்றத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
அவர் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் லக்னோ போலீஸ் ஆணையருக்கும் நீதிமன்ற தீர்ப்பின் நகலைஅனுப்பி வைக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்சி சட்டத்தின் கீழ் எந்த பெண்ணாவது பாலியல், கூட்டு பாலியல் தொடர்பாக புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட பெண் வேறு எங்காவது பாலியல் புகார் கொடுத்திருக்கிறாரா, தொடர்ந்து பாலியல் புகார் கொடுத்திருக்கிறாரா என்பதை ஆணையர் விசாரிக்க வேண்டும். இவ்வாறு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.