கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக எழுந்த புகார்கள், நாட்டையே அதிரவைத்த நிலையில், இந்தப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகளின் சடலங்களைப் புதைத்ததாக பகிரங்கமாகக் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜூன் 22-ல் அவர் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஜூன் 27-ல் வழக்கறிஞர்கள் வலியுறுத்திய பின்னர், ஜூலை 3-ல் அது தொடர்பாக, முறையாக அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில், அந்தச் சடலங்கள் தற்கொலை செய்துகொண்டவர்கள் அல்லது விபத்தில் இறந்தவர்களுடையதாக இருக்கும் என்றே தான் கருதியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்கள், சிறுமிகளின் சடலங்கள் அவை எனத் தெரியவந்தாலும், தொடர்ந்து பல காலமாகச் சடலங்களைப் புதைக்கவும், எரிக்கவும் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
பாலியல் வன்கொடுமையை நேரில் பார்த்த சாட்சிகளும் கொல்லப்பட்டதாக அவர் அதிர்ச்சிகளை அடுக்கியிருந்தார். சடலங்களை அப்புறப்படுத்த ஒத்துழைக்க மறுத்தால் அவரும் கொல்லப்படலாம் என்று மிரட்டப்பட்டதாகவும், 2014-ல் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட பின்னர், தனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, 2003-ல் காணாமல் போன பெண்ணின் தாய், மீண்டும் புதிதாக ஒரு புகார் அளித்திருந்தார். தனது பெண்ணின் எலும்புக்கூட்டையாவது தோண்டி எடுத்துக் கொடுத்தால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியும் என்று அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக, ஆரம்பத்தில் மவுனம் காத்த தர்மஸ்தலா நிர்வாகம், பின்னர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியதுடன், நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே அரசியல் செல்வாக்கு கொண்டவர் என்பதால், அரசியல் ரீதியாகவும் கடும் விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்தன. இந்தப் பின்னணியில், கர்நாடக அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில், தர்மஸ்தலா பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதுடன், அது குறித்த மர்மமும் நீடிக்கிறது.
அதாவது, கர்நாடகாவில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக புகார் அளித்த முன்னாள் தூய்மைப் பணியாளரை போலீஸார் கைது செய்ததுதான் அந்தத் திருப்பம். கூடவே, இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசு நியமித்த சிறப்பு விசாரணை குழுவைச் சேர்ந்த போலீஸார், நேத்ராவதி ஆற்றங்கரையில் 13 இடங்களில் தோண்டி, சோதனை நடத்தினர். அதில் 3 இடங்களில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், மண்டை ஓடு கிடைக்கவில்லை.
இதையடுத்து தர்மஸ்தலா கோயில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே, “தர்மஸ்தலா கோயிலின் மாண்பை கெடுக்கும் வகையில் பொய்ப் புகார் அளித்துள்ளார்” என குற்றம்சாட்டினார். அதேபோல், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, “இதன் பின்னணியில் தமிழக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இருக்கிறார்” என குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் சிலரும், எம்எல்ஏக்கள் சிலரும் கூட தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சட்டப்பேரவையில் பதிலளிக்கும்போது, “தர்மஸ்தலா மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற கோயிலாகும். அதன் முன்னாள் தூய்மை பணியாளர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. அங்கு தவறு நடந்திருந்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறு பரப்பினால் நன்கு ஆராய்ந்து தண்டனை வழங்கப்படும்” என்றார்.
இந்நிலையில்தான், சிறப்பு விசாரணைக் குழு போலீஸார், புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரிடம் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் தவறான தகவல்களை கூறி, போலீஸாரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. எனவே, அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் மற்றொரு புகார்தாரரான சுஜாதா பட் என்பவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், “தர்மஸ்தலாவில் என் மகள் அனன்யா பட் கொல்லப்பட்டதாக புகார் கூறினேன். அவர் எனது மகள் அல்ல. என் நண்பரின் மகள். நான் பொய் புகார் அளித்தமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என பல்டி அடித்துள்ளார்.
தர்மஸ்தலா பாலியல் கொலை விவகாரத்தில் புகார் அளித்த நபர் மீதே நடவடிக்கை எடுத்திருப்பதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னதாக, தன் அடையாளத்தை இதுவரை வெளிப்படுத்தாத, நீதிமன்றப் பாதுகாப்பில் உள்ள அந்த 50 வயது முன்னாள் தூய்மைப் பணியாளர், அளித்த பேட்டி ஒன்றில், “மண் அரிப்பு, காடுகளின் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக சில புதைக்குழிகள் காணாமல் போயிருக்கலாம். பகல் நேரத்தில் உடல்களை புதைப்பதை உள்ளூர்வாசிகள் பார்த்தனர். ஆனால், யாரும் எங்களைத் தடுக்கவோ அல்லது விசாரிக்கவோ இல்லை. கோயிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதால் எனக்கு என்ன லாபம்?” என்று கூறியிருந்தார்.
இதனிடையே, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில்தான் பொய்ப் புகாரின் பின்னணியில் இருக்கிறார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டும் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்குக் காரணம், கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சிப் பணியாற்றியவர் சசிகாந்த் செந்தில். ஆட்சிப் பணியில் இருந்து விலகிய அவர், காங்கிரஸில் சேர்ந்து, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் அவரோ, இந்த வழக்கை திசை திருப்பி, சாட்சியங்களை மண்ணில் புதைத்து மறைக்க முயல்கிறது பாஜக என்று பதில் தந்திருக்கிறார்.
முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும், ஆதாரங்களைக் கொடுத்து விசாரணை அதிகாரிகளை ஏமாற்றியதாகவே அந்த முன்னாள் தூய்மைப் பணியாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதேவேளையில், இந்த வழக்கு விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே முன்னாள் தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின்படி, ஏராளமான பெண்கள், சிறுமிகள் பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்களா, அப்படி நடந்திருந்தால், அதற்குப் பின்னால் ஏதாவது பெரிய நெட்வொர்க் இருக்கிறதா அல்லது இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவையா, தர்மஸ்தலாவின் மாண்மை சீரழிக்கும் சதிச் செயலா என்பதெல்லாம் நேர்மையான இறுதி விசாரணை முடியும்போதுதான் தெரியவரும்.
அதேவேளையில், இந்த விவகாரம் கர்நாடகாவில் அரசியல் புயலைக் கிளப்பி, வார்த்தைப் போரையும், களப் போராட்டங்களையும் முடுக்கிவிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. ஆளும் காங்கிரஸை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலர், எதிர்க்கட்சிகளான பாஜக, மஜத ஆகியவற்றின் முக்கியத் தலைவர்கள் முதலானோர், பாலியல் வழக்கின் மூலமாக கோயிலை களங்கப்படுத்த சதி நடத்தப்படுவதாக தொடர்ந்து சாட்டி வருவதும் கவனிக்கத்தக்கது.