புதுடெல்லி: இண்டிகோ நிறுவனத்தின் பைலட் ஒருவர், தான் இயக்கும் விமானத்தில் முதல் முறையாக பயணியாக வந்த தனது தாயை வரவேற்று பயணிகள் முன் கவுரவித்து நன்றி தெரிவித்தார்.
இண்டிகோ நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றுபவர் கேப்டன் ஜஸ்வந்த் வர்மா. இவர் இயக்கும் விமானத்தில், அவர் அம்மா முதல் முறையாக பயணியாக வந்தார். அவரை விமான அறையில் இருந்து வெளியே வந்து வரவேற்ற கேப்டன் ஜஸ்வந்த் வர்மா பயணிகளிடம் மைக் மூலம் அறிமுகம் செய்து நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் கேப்டன் ஜஸ்வந்த் பேசுகிறேன். உங்கள் பயணத்துக்கு இண்டிகோ நிறுவன விமானத்தை தேர்வு செய்ததற்கு நன்றி. இது எனக்கு மிகவும் சிறப்பான நாள். எனக்கு ஆதரவளித்து, எனது பைலட் கனவை நனவாக்கிய என்னுடைய அம்மா, நான் இயக்கும் விமானத்தில் முதல் முறையாக பயணிக்கிறார். அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவிக்கவும்.
நாங்கள் திருப்பதி அருகேயுள்ள தொலைதூர கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு பைலட் ஆவது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. நான் பைலட் ஆவதற்கான போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர் அம்மா. எனது கல்வி கடன் மாத தவணை செலுத்துவதற்காக, பல காலம் தூக்கம் இன்றி தவித்தவர்.
அவரால் தான் நான் உங்கள் முன்பு விமான கேப்டனாக நிற்கிறேன். எனது வாழ்நாள் கனவு நனவாக அவரே காரணம். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ‘‘நானாக நான் இல்லை தாயே…’’ எனக் கூறி தனது உரையை முடித்தார். இந்த உருக்கமான பேச்சை கேட்ட பயணிகள் இருவரையும் பாராட்டினர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. “தாய்க்கு வரவேற்பு” என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோவும் பலரை கவர்ந்தது. இதைப் பார்த்து பலரும் நெகிழ்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.