அகமதாபாத்: குஜராத்தில் போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு உதவப் போவதாகக் கூறி, அது தொடர்பாக வீடியோக்களை காட்டி மசூதிகளில் சிலர் நன்கொடை வசூலிப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், அகமதாபாத் நகரின் எல்லிஸ் பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அலி மெகாத் அல்-அசார் (23) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அல்-அசார் மற்றும் 3 பேர் என மொத்தம் 4 பேர் சிரியாவிலிருந்து சுற்றுலா விசா மூலம் அகமதாபாத் வந்துள்ளனர். 4 பேரும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்ததும் காசா மக்களுக்காக வசூலித்த நிதியைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே மற்ற 3 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இவர்கள் 4 பேரும் அகமதாபாத்தில் வேவு பார்த்ததாகவும் சிலருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் சந்தேகிக்கிறோம். எனவே, அவர்கள் எதற்காக குஜராத் வந்தார்கள், திரட்டிய நிதியை எங்கு அனுப்பினார்கள் என்பது குறித்து, குஜராத் தீவிரவாத தடுப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினருடன் இணைந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.