புவனேஸ்வர்: ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்தியது.
போர்க் காலங்களில் எதிரி நாடுகளின் ஏவுகணைகள், ட்ரோன்களை முறியடிக்க ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (ஐஏடிடபிள்யூஎஸ்) மிக முக்கியமானதாகும். இந்த ஐஏடிடபிள்யூஎஸ்-ன் முதல் சோதனை ஒடிசா கடற்கரையில் ஆகஸ்ட் 23-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஐஏடிடபிள்யூஎஸ் என்பது உள்நாட்டு விரைவு எதிர்வினை மேற்பரப்பு வான் ஏவுகணைகள், குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகள், உயர் சக்தி கொண்ட லேசர் அடிப்படையிலான நேரடி ஆற்றல் ஆயுதம் (டிஇடபிள்யூ) ஆகியவற்றை உள்ளடக்கிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
இந்த சோதனைகளின்போது இரண்டு அதிவேக ஆளில்லா வான்வழி வாகன இலக்குகள் மற்றும் ஒரு மல்டி-காப்டர் ட்ரோன் உள்ளிட்ட மூன்று வெவ்வேறு இலக்குகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு வரம்புகள் மற்றும் உயரங்களில் ஈடுபடுத்தப்பட்டு முழுமையாக அழிக்கப்பட்டன. ஏவுகணை அமைப்புகள், ட்ரோன் கண்டறிதல், அழிக்கும் அமைப்பு, ஆயுத அமைப்பு கட்டளை உள்ளிட்ட அனைத்து கூறுகளும் துல்லியமாக செயல்பட்டன. இந்த தனித்துவமான சோதனைகள் நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்றும், எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தம் என்றும் கூறி டிஆர்டிஓ மற்றும் ஆயுத படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.