புதுடெல்லி: ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் விமான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின்(IADWS) முதல் விமான சோதனைகள் ஒடிசா கடற்கரையில் இன்று 12.30am அளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு என்பது ஒரு உள்நாட்டு தயாரிப்பு. மிக குறுகிய தூரத்துக்குள் அதிவிரைவாகச் சென்று எதிரியின் ஏவுகணைகள் மற்றும் உயர்சக்தி லேசர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கவல்ல பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDOவின் வெற்றிகரமான இந்த சோதனை முயற்சிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் விமான சோதனையை டிஆர்டிஓ ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று வெற்றிகரமாக நடத்தியது.
IADWS-ன் வெற்றிக்காக பாடுபட்ட டிஆர்டிஓ, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு வாழ்த்துகள். இந்த தனித்துவமான விமான சோதனை நமது நாட்டுக்கு பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவியுள்ளது. எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது பாதுகாப்பை இது வலுப்படுத்தப்போகிறது.” என தெரிவித்துள்ளார்.