பாட்னா: பிஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பெண்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அண்மையில் அங்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போதும் அவர்களது வாக்காளர் அட்டை சரிபார்க்கப்பட்டுள்ளது.
விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்து உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வுப் பணியின் அடிப்படையில் இது அடையாளம் காணப்பபட்டுள்ளது. இது குறித்த தகவல் மாவட்ட நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களது இருவரது பெயரையும் நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நீதிபதியும், எஸ்.பி-யும் உரிய விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.
படிவம்-7 மூலம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்துறை மேற்கொண்ட விசாரணையில் வாக்காளர் பட்டியலில் இப்துல் ஹசன் மனைவி இம்ரானா, தஃப்ஜில் அகமது மனைவி ஃபிர்தொசியா என அவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் கடந்த 1956-ல் இந்தியா வந்துள்ளனர். ஃபிர்தொசியா மூன்று மாத விசாவிலும், இம்ரானா மூன்று ஆண்டு கால விசாவிலும் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் இருவரும் முதியவர்கள் என்பதால் இது குறித்து பேச மறுத்துள்ளதாக தகவல்.
“இதுவரை யாரும் விசாரணைக்காக எங்களை அணுகவில்லை. எங்களிடம் உள்ள ஆதாரத்தை நீங்கள் பார்க்கலாம். தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது வட்ட அளவிலான அதிகாரியிடம் இதைதான் கொடுத்திருந்தோம். இது தேர்தல் ஆணையம் கேட்ட 11 ஆவணங்களில் ஒன்றாகும். தேர்தலின் போது தொடர்ந்து வாக்களித்து வருகிறோம்” என்று ஃபிர்தொசியாவின் மகன் முகமது குர்லஸ் கூறியுள்ளார்.
பிஹார் SIR: பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான பணியை தொடங்கியது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையின் போது பிஹாரில் இறந்து போனவர்கள், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள் என ஆயிரக்கணக்கானோரை கண்டுபிடிக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.