புதுடெல்லி: சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா நேற்று சிக்கிம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.
கர்நாட மாநிலத்தின் சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா (50). இவர் மற்றும் இவரது சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு சொந்தமான 30 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் வெளிநாட்டு கரன்சி உட்பட ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்புடைய தங்க நகைகள, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 4 வாகனங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. மேலும் 17 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வங்கி லாக்கர்களை முடக்கியது.
கோவாவில் பப்பீஸ் கேசினா கோல்டு, ஓஷன் ரிவர்ஸ் கேசினோ, பப்பீஸ் கேசினா பிரைடு, ஓஷன் 7 கேசினோ, பிக் டாடி கேசினோ உள்ளிட்ட 7 சூதாட்ட மையங்களில் சோதனை நடைபெற்றது. இவை அனைத்தும் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு தொடர்புடையதாகும். இந்நிலையில் சூதாட்ட மையம் ஒன்றை குத்தகைக்கு எடுப்பதற்காக நண்பர்களுடன் சிக்கிம் மாநிலம் சென்றிருந்த வீரேந்திராவை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காங்டாக்கில் கைது செய்தனர். இதையடுத்து அவரை இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், “வீரேந்திராவின் சகோதரர் கே.சி.நாகராஜ், அவரது மகன் பிருத்வி என்.ராஜ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இருந்தும் சொத்து தொடர்பான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வீரேந்திராவின் மற்றொரு சகோதரர் கே.சி.திப்பேசாமி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் துபாயில் இருந்து ஆன்லைன் சூதாட்ட செயல்பாடுகளை கையாளுகின்றனர்” என்று தெரிவித்தனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.