சென்னை: பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
50 ஆண்டு கால பயணம்: சரோஜாதேவி தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ள இவர், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இவர் பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். அதேபோல, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
‘கன்னடத்துப் பைங்கிளி’ – தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜாதேவி,
ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த ‘மகாகவி காளிதாஸா’ என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன் பின்னர் 2வது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.
அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘ரத்னா’வாக வந்து அலங்கரித்த சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.
எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன.
சரோஜாதேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி.
சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.
மாயையை உடைத்தவர்: படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜாதேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர்.
சரோஜா தேவி, எம்ஜிஆருடன் 26 படங்களிலும, சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்.