சென்னை: மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் இன்று அறிமுகம் செய்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடல் சென்னைக்கு அருகில் உள்ள பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து இன்றுடன் ஒரு வருடம் ஆன நிலையில், நினைவுப் பேரணி இன்று நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பொத்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் 9 அடி முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் நினைவுதின நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயருடன் புதிய கட்சியை இன்று தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி. அத்துடன் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். நீல நிறத்தில் அமைந்துள்ள இந்த கொடியில் யானை தனது தும்பிக்கையில் பேனா வைத்திருப்பது போன்ற சின்னம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பில் இருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கப்பட்டார். இதனால் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியில் குழப்பம் நிலவி வந்தது.