புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. பல நேரங்களில் கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேகவெடிப்பு மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் விளைந்துள்ளது.
கனமழைக்கு இதுவரை அங்கு 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளனர். அதிகளவாக மண்டி மாவட்டத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட மண்டியில் மட்டும் ரூ.400 கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை, ஆற்றில் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மழை, வெள்ளத்தில் சிக்கி 110 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் உறுதி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது; நாட்டின் பல மாநிலங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுடன் பேசினேன். மக்களுக்கு உதவ போதிய எண்ணிக்கையிலான தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மாநிலங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.
தேவைப்பட்டால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய அரசிடம் இருந்து அளிக்கப்படும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்தேன். இவ்வாறு அமித் ஷா கூறி யுள்ளார்.
7-ம் தேதிவரை கனமழை: இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜூலை 7-ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அங்கு பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பலத்த மழை குறித்து இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் கூறியதாவது: பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 14 இடங்களில் மேகவெடிப்பு மழை பதிவாகியுள்ளது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மழையால் மண்டி, துனாக், பாக்சயேத் போன்ற இடங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டியில் மட்டும் ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். ஹமிர்பூர், பிலாஸ்பூர், கின்னாவூர், குலு, லாஹவுல் ஸ்பிட்டி, சிர்மாவூர், சோலன், உனா மாவட்டங்களில் மழையால் பலர் இறந்துவிட்டனர்.
14 இடங்களில் மழை, வெள்ளத்தால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 164 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.