சென்னை: மாற்று இடங்களில் தங்களுக்கு வீடுகளை ஒதுக்கி தர கோரி, மெரினா காமராஜர் சாலையில் திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக அரசு சார்பில், சென்னை கண்ணகி நகரில் திருநங்கைகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
அங்கு அடிக்கடி குற்றங்கள் நடப்பதாகவும், குடியிருக்க போதிய வசதிகள் இல்லை எனவும் திருநங்கைகள் குற்றம் சாட்டி வந்தனர். அதனால், மயிலாப்பூர் உள்பட சென்னையில் வேறு இடங்களில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்னை மெரினா, காமராஜர் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
அப்போது, அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்காததால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் திடீரென காமராஜர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மயிலாப்பூர் உதவி காவல் ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து, திருநங்கைகள் சாலை மறியலை கைவிட்டனர்.
போக்குவரத்து நெரிசல்: திருநங்கைகளின் திடீர் சாலை மறியலால், மெரினா உழைப்பாளர் சிலை முதல் காவல்துறை டிஜிபி அலுவலகம் வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.