சென்னை: ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, அண்ணா பிறந்த நாளான நேற்று, திமுக சார்பில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளில், ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை இணைத்துள்ளது. இதன் முதற்கட்டம் ஜூலை 1 முதல் 70 நாட்களுக்கும் மேல் நடைபெற்று, திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் மூலம் 68,000 வாக்குச்சாவடிகளில் உள்ள குடும்பங்களைச் சந்தித்தனர். இந்நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலம் இணைந்தவர்களை ஒன்றுதிரட்டி, உறுதி மொழியேற்கச் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளிலும் திமுகவில் இணைந்த குடும்பத்தினர் தமிழகத்தை தலைகுனியவிடமாட்டோம் என உறுதிமொழியேற்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் உறுதியேற்பு நிகழ்வை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வுகளில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர், இளம்பெண்கள் என திரளானோர் பங்கேற்று உறுதிமொழியேற்றனர்.
குறிப்பாக, கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி., திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு, திருச்சுழி தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர், திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி ஆகியோர் தலைமையிலும், திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பொதுமக்கள் கூடி உறுதிமொழி ஏற்றனர்.
இதில் நீட் விலக்கு, தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, வாக்காளர் பட்டியல் மோசடி, கல்வி நிதி மறுப்புக்கு எதிர்ப்பு, தமிழ்த் தொன்மை இருட்டடிப்புக்கு எதிர்ப்பு ஆகிய 5 உறுதிமொழிகளை ஏற்று ‘‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டோம்’’ என உறுதியேற்றனர். மேலும், இதே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கரூரில் செப்.17-ம் தேதி (நாளை) நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக, செப்.20, 21 அன்று மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.