சென்னை: சீனாவின் ஊடுருவல்கள் பற்றி கேள்வி எழுப்பினால், தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவதாக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: கடந்த 2022-ம் ஆண்டு இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, லடாக் எல்லையில் இந்தியாவின் 2,000 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்து விட்டதாக ராகுல் கூறி இருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய்சங்கர் வத்சவா, லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக கீழ் நீதிமன்றம் நடவடிக்கைகளை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு அளித்த போதிலும் பிரதமர் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால் எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவல்கள் பற்றி கேள்வி எழுப்பினால், அவர்களை தேச விரோதிகள் என்று பாஜக முத்திரை குத்தும் போக்கு தொடர்கிறது.
இத்தகைய அவதூறுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பாஜகவினருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை நசுக்க, பாஜக அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள் மற்றும் வழக்குகளை காங்கிரஸ் எதிர் கொண்டு முறியடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.