சென்னை: கோயில் பணியாளர்களுக்கு துறை நிலை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் துறை நிலை ஓய்வூதியம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், துறை நிலை குடும்ப ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து, ரூ.2,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என 2025-26 சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கான துறை நிலை மாத ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இதேபோல, ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களின் மறைவுக்கு பிறகு, அவர்களது நேரடி வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.