புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:
‘ஆர்யபட்டாவில் இருந்து ககன்யான் வரை: பண்டைய ஞானத்தில் இருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள் வரை’ என்பதே இந்த ஆண்டு விண்வெளி தினத்தின் கருப்பொருள். கடந்த 2023-ல் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து உலக சாதனை படைத்தோம். அதை தொடர்ந்து, விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்தில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த தொழில்நுட்ப திறன் கொண்ட உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
நமது குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பியுள்ளார். அங்கு அவர் தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்தார். சமீபத்தில் நான் அவரை சந்தித்தபோது, அந்த கொடியை என்னிடம் காண்பித்தார். அதை பார்த்து பேரானந்தம் அடைந்தேன். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
உலகின் மிகப்பெரிய விண்வெளி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. கிரையோஜெனிக் இயந்திரம், மின்சார உந்துவிசை போன்ற தொழில்நுட்பங்களில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதை தொடர்ந்து, அடுத்து வரும் ஆண்டுகளில் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷஸ்டேஷன்) கட்டப்படும்.
விண்வெளி துறையில் கடந்த 11 ஆண்டுகளில் மாபெரும் சீர்திருத்தங்களை அமல்படுத்தி உள்ளோம். குறிப்பாக, விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த 350 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. விண்வெளி துறையில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் களமிறங்கி சாதிக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் 5 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாக வேண்டும். தற்போது ஆண்டுதோறும் 5 முதல் 6 பெரிய ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்க வேண்டும். அதன்பிறகு, வாரத்துக்கு ஒரு ராக்கெட்டை விண்ணில் ஏவ வேண்டும்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விண்வெளி தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறோம். பசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் செயற்கைக் கோள்கள் மூலமாக மீனவர்களுக்கு அத்தியாவசிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. விண்வெளி தொழில்நுட்பம் மூலம் பேரிடர் மேலாண்மை திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுகின்றன. ‘பிரதமர் கதி சக்தி’ திட்டத்தில் புவிசார் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
விண்வெளி நிலைய மாதிரி அறிமுகம்: அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐப்பான், கனடா ஆகியவை இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா, இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தார்.
கடந்த 2022-ம் ஆண்டில் சீனாவின் சார்பில் ‘டியான்காங்’ விண்வெளி நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த நிலையத்தில் சீன விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா சார்பில் வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, கடந்த ஜனவரியில் இஸ்ரோ சார்பில் விண்வெளியில் 2 செயற்கைக் கோள்கள் ‘டாக்கிங்’ தொழில்நுட்பம் மூலமாக வெற்றிகரமாக இணைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
பூமியில் இருந்து 450 கி.மீ. தொலைவில் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்) கட்டப்பட உள்ளது. இதற்கான முதல் தொகுப்பு (பிஏஎஸ்1) வரும் 2028-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்தடுத்து 4 தொகுப்புகள் விண்ணில் நிலைநிறுத்தப்படும். இந்த 5 தொகுப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு வரும் 2035 முதல் இந்திய விண்வெளி நிலையம் செயல்படத் தொடங்கும். இந்த சூழலில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய விண்வெளி நிலையத்தின் மாதிரி அறிமுகம் செய்யப்பட்டது. இதை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.