புதுடெல்லி: பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை என்றும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏற்க மறுத்ததாலேயே பிறகு சேர்க்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாட்டின் பார்வையில் வெற்றிகரமாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் பார்வையில் அது தோல்வி அடைந்த ஒன்று. அரசு இதை வெற்றி பெற்றதாகவே கருதுகிறது. விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்கவில்லை.
பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் புரட்சிகரமானவை. இந்த மசோதாக்களை நாடு வரவேற்கிறது. ஏனெனில், பிரதமர் பதவி உட்பட எந்த பதவியும் இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல.
பிரதமர் பதவியை இந்த மசோதாவில் இருந்து விலக்கிவைக்க வேண்டும் என்பதே பரிந்துரை. ஆனால், அந்தப் பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கவில்லை. பிரதமரும் ஒரு குடிமகன், அவருக்கு சிறப்பு பாதுகாப்பு இருக்கக் கூடாது என கூறி அவர் மறுத்துவிட்டார்.
நாட்டின் பெரும்பாலான முதல்வர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஏதாவது தவறு செய்தால், அவர்கள் தங்கள் பதவியை விட்டு வெளியேற வேண்டும். நெறிமுறைகள்தான் முக்கியம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்திருந்தால் அவர்கள் இந்த மசோதாவை வரவேற்றிருப்பார்கள்.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது உள்துறை அமைச்சர் மீது காகிதங்கள் வீசப்பட்டன. இது சரியல்ல. இது குறித்து நான் பலமுறை அவர்களிடம் கூறிவிட்டேன். அவர்கள் எல்லா வரம்புகளையும் மீறுகிறார்கள். அவர்கள் உள்துறை அமைச்சரின் மைக்கை பிடித்தார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சலிடுங்கள், ஆனால் எதையும் தொடாதீர்கள் என நாங்கள் சொன்னோம். கைகலப்பு ஏற்பட்டுவிட்டால் அது நாட்டுக்கு அவமானம். ஆனால், தங்கள் கட்சித் தலைவரின் உத்தரவு அப்படி இருப்பதால் அவர்கள் சலசலப்பை உருவாக்க எதையும் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
நாடாளுமன்றம் இயங்கவில்லை என்றால் எதிர்க்கட்சிகளுக்கு இழப்பு ஏற்படும். ஆனால், நாடாளுமன்ற விவாதங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஆர்வமும் இல்லை. நாடாளுமன்ற விவாதத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் உட்பட பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் என்னிடம் பேசும்போது, நாடாளுமன்றம் முடக்கப்படுவதால் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
தேசிய நலனுக்காக அரசாங்கம் மசோதாக்களை நிறைவேற்றும். ஆனால், மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டால் அது நல்லதல்ல. நாங்கள் விவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். கேள்வி கேட்க வேண்டியவர்கள் ஓடிவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என தெரிவித்தார்.