நொய்டா: நொய்டாவில் வரதட்சணைக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற அப்பெண்ணின் கணவர் விபின் பாட்டி காலில் சுட்டு பிடிக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேசம், நொய்டாவில் ரூ.36 லட்சம் வரதட்சணைக்காக கணவன் வீட்டார் பெண்ணைத் தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர். அப்பெண்ணின் இளம் வயது மகன் கண் முன்பாக இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த இளம் பெண் நிக்கியின் தந்தை அளித்தப் பேட்டியில், “என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். உ,பி. அரசு குற்றவாளிகள் அனைவரையும் என்கவுன்ட்டர் செய்ய வேண்டும், விபினின் வீட்டை புல்டோசர் விட்டு தரைமட்டமாக்க வேண்டும். இது யோகி அரசு. இந்த அரசு என் மகளுக்கு நீதி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.
இதனிடையே, நிக்கியின் கணவர் விபின் பாட்டியை போலீஸார் கைது செய்தனர். அப்போது, போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற நிலையில், குற்றவாளி விபின் பாட்டியின் காலில் சுட்டு அவரை பிடித்தனர். போலீஸார் குற்றவாளியை மீட்டு அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததுள்ளது. அப்போது, குற்றவாளி காவலில் இருந்து தப்பிச் செல்ல, காவல்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றார் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது; “குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
நடந்த சம்பவம் குறித்து குற்றவாளி, “எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. நான் என் மனைவியைக் கொல்லவில்லை. நிக்கியே அவளை மாய்த்துக் கொண்டாடள். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வருவது மிகவும் சாதாரணமானது,” என்று கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நிக்கியின் மாமியார் தயா, மாமனார் சத்யவீர் மற்றும் மைத்துனர் ரோஹித் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த கொடூரமான சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.