கயா: சிறையில் இருந்து கொண்டே கோப்புகளில் கையெழுத்திடப்படும் சம்பவங்களையும் நாம் பார்த்தோம் என எதிர்க்கட்சியினர் குறித்து பிரதமர் மோடி கிண்டல் செய்தார். சிறையில் 30 நாட்கள் இருந்தால் பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் பிஹாரில் ரூ.13,000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதில் மின்சாரம், சாலைகள், சுகாதாரம், நகர்ப்புற கட்டமைப்பு மற்றும் குடிநீர் விநியோக திட்டங்கள் அடங்கும்.
கயா மற்றும் டெல்லி, வைஷாலி மற்றும் கோதெர்மா இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: ராஷ்ட்ரிய ஜனதா ஆட்சி காலத்தில் பிஹார் இருந்த நிலையை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த மாநிலத்தையும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இருளில் தள்ளியது. கல்வியும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை. மக்கள் வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்ந்து வந்தனர். மக்களை ஒட்டு வங்கிகளாக மட்டுமே ராஷ்ட்ரிய ஜனதா தளம் பார்த்தது.
பிஹார் மக்களை உள்ளே விட மாட்டோம் என காங்கிரஸ் முதல்வர் ஒருவர் கூறினார். அவரது மாநிலத்தில் பிஹார் மக்கள் நுழைய அவர் அனுமதிக்க மாட்டார். பிஹார் மக்கள் மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்பை யாரும் மறக்க முடியாது. பிஹார் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு தே.ஜ கூட்டணிதான் கடினமாக உழைக்கிறது.
அரசு துறைகளில் பணியாற்றும் பியூன், ஓட்டுநர், எழுத்தர் போன்ற பணியாளர்கள் 50 மணி நேரம் சிறையில் இருந்தால், அவர் வேலையை இழக்க நேரிடுகிறது. ஆனால், ஒரு முதல்வரோ, அமைச்சரோ, பிரதமரோ சிறையில் இருந்தாலும் அரசு பணியில் தொடர்கிறார். சிறையில் இருந்தே கோப்புகள் கையெழுத்திட்ட அவலத்தை பார்த்தோம்.
அரசியல் கட்சி தலைவர்கள் இதுபோன்ற மனநிலையில் இருந்தால், நாம் எப்படி ஊழலுக்கு எதிராக போராட முடியும். ஊழலை ஒழிக்க தே.ஜ கூட்டணி அரசு சட்டம் கொண்டு வருகிறது. இதன் வரம்புக்குள் பிரதமரும் வருகிறார். ஆனால், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த புதிய சட்டத்தை எதிர்க்கின்றன.
சிறையில் இருப்பவர், அரசியல் சாசன பதவிகளில் எல்லாம் தொடர முடியும் என ராஜேந்திர பாபு போன்ற நம் முன்னோர்கள் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். தவறு செய்யும் தலைவர்கள் அதன் விளைவுகளை நினைத்து பயப்படுகின்றனர்.
ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு: நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களையும், ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகள் பாதுகாக்கின்றன. நாட்டில் உள்ள இளைஞர்களின் உரிமையை ஊடுருவல்காரர்கள் பறிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. அவர்கள் அடையாளம் காணப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த ஊடுருவல்காரர்கள் பற்றி பிஹார் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.