மதுரை: மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் பாதுகாவலர் துப்பாக்கியை வைத்தது குறித்த வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் பகுதியில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை திரும்புவதற்கு இன்று (மே 5) மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். அவரது தொண்டர்கள், ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். பாதுகாப்பு கருதி போலீஸார் குறிப்பிட்ட நிர்வாகிகளை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில், கருப்பு காரில் வந்து விமான நிலையத்தில் இறங்கிய விஜய் விமான நிலையத்துக்குள் சென்றார்.
அப்போது காருக்கு அருகே நின்றிருந்த ஒருவர் கையில் சால்வையுடன் திடீரென ஓடி வந்தார். அவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்றபோது, அந்த நபரை விஜய்யை நெருங்கவிடாமல் பாதுகாவலர்கள், பவுன்சர்கள் பாய்ந்து சென்று தடுத்தனர். பாதுகாவலர்களில் ஒருவர் அந்த நபரின் தலையில் கைத்துப்பாக்கியை எடுத்து வைக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்த நபரை விசாரித்தபோது, அவர் விஜய்யின் தீவிர ரசிகரான மதுரையைச் சேர்ந்த இன்பராஜ் என்று தெரியவந்தது. இருப்பினும், பொது இடத்தில் விஜய்யின் பாதுகாவலர் துப்பாக்கி எடுத்து காட்டியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து இன்பராஜ் கூறுகையில், “தலைவர் விஜய் இன்று (மே 5) மதுரை விமான நிலையத்துக்கு வருவது தெரிந்து அங்கு சென்றேன். விஜய் காரில் வந்து இறங்கிய இடம் அருகே நின்றிருந்தேன். எப்படியாவது அவருக்கு சால்வை அணிவிக்கும் நோக்கில் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த சால்வையுடன் தலைவரை நோக்கி ஓடினேன். பாதுகாவலர்கள் என்னை தடுத்தனர்.
எனக்கு காயம் எதுவுமில்லை. எனது தலையில் யார் துப்பாக்கி வைத்தது என்று தெரியாது. தவறாக வைத்திருக்கலாம். அது பற்றியெல்லாம் கவலை இல்லை. தலைவரை பாதுகாப்பாக அனுப்ப வேண்டியது பாதுகாவலர்களின் கடமை. அப்படியே துப்பாக்கியால் சுட்டாலும் அங்கேதான் நின்றிருப்பேன். 33 ஆண்டுகளாக நான் விஜய் ரசிகர். எனது திருமணத்தை தலைவர் தான் நடத்தி வைத்தார். அவருக்கு தொண்டர், ரசிகர் என்பதைவிட அவர் எனது ரத்ததுடன் கலந்த உயிர்,” என்றார்.