சென்னை: “அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நீட் விலக்கு பெறுவதற்கு தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்” என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நீட் வந்த நாள் முதலே குளறுபடிகள் தான் நடக்கிறது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் என்பது சட்டரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த 7.5 சதவீதத்தினால் பலனும் இருக்கின்றது என்கின்ற வகையில், தமிழக முதல்வர், மருத்துவ கல்வி போல் சட்டம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீதத்தை கொண்டு வந்தார்.
இதனை உயர்த்தி வேறு யாராவது நீதி மன்றங்களுக்கு சென்று சட்டரீதியான சிக்கல் வந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கின்றது. 10 சதவீதம் வரை உயர்த்த சட்டரீதியான நுணுக்கங்களை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. முதல்வர் நிச்சயம் சட்ட விதிகளை பின்பற்றி எந்த நடவடிக்கையானாலும் எடுப்பார்.
அவசரக்கோலத்தில் அள்ளி தெளித்த கதையாக கடந்த காலங்களில் போடப்பட்ட ஆணைகள் எப்படி கிடப்பில் இருக்கின்றதோ, நாம் நன்றாக அறிவோம். எனவே, அந்த வகையில் இதை தெரிந்து சரியான முடிவை எடுப்பது என்பது தான் முதல்வரின் கடமை. நீட் விலக்கு பெறுவோம் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் விளக்கை பெறுவோம் என்கின்ற வகையிலான அறிவிப்பு இருக்கின்றது.
நீட் விலக்கு பெற தமிழக முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. இதில் அக்கறை உள்ளவர்களாக இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நீட் விலக்கு பெறுவதற்கு இந்த அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.