மதுரை: “கிரானைட் உரிமம் மோசடி வழக்கில் சாட்சியளிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்” என மதுரை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் குவாரி வழக்குகள் மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் நேரில் ஆஜராக ஏற்கெனவே அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு 3-வது சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை. தனக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது நியாயமற்றது என சகாயம் பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார். சகாயத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை சார்பில், “ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014 முதல் 2023 வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதில் சகாயமும் ஒருவர். இருப்பினும் நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இல்லாமல் சாட்சியம் அளிப்பதற்கு வசதியாக சகாயத்துக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும்” என விளக்கம் அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 5) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், சகாயத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்கு நீதிபதி லோகேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் ஆஜராகவில்லை. பின்னர் நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராக சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை?. அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா? என்பதை அரசு வழக்கறிஞர் காவல்துறையிடம் கேட்டு நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பு வழங்காவிட்டால், பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்படும், எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.