சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒருமணி நேரம் காலதாமதாக பணிக்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளினால் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர். நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டுகள் பழமையான படைத்துறை தொழிற்சாலைகளை 7 துண்டுகளாக உடைத்து கூடுதல் பணி நேர ஊதியம் (ஓ.டி.), கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பறித்து 4 ஆண்டுகளாக பழிவாங்கி வருகிறது.
பாதுகாப்பு துறை ஊழியர்களின் தொடர் போராட்டங்கள் விளைவாக நடப்பு ஆண்டில் சீருடைக்கான பணி ஓசிஎஃப் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான நியாயமான பீஸ்ரேட்டை வழங்காமல் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுமை நடைபெற்று வருகிறது. இதுபோன்று நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில், மத்திய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎஃப் உள்பட மற்றும் துறை சார்ந்த சம்மேளனங்கள் இணைந்து, மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தற்போதுள்ள சட்டப்படி 6 வார காலம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குதல், வேலை நிறுத்த வாக்கெடுப்பு நடத்துதல் போன்ற நடைமுறைகள் உள்ள காரணத்தால், அன்றைய தினம் உழைக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒருமணி நேரம் காலதாமதமாக ஆர்ப்பாட்டம் செய்து பணிக்கு செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.