காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று பஹல்காம் சென்று அங்கு சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துரையாடினார். காஷ்மீரில் நிலைமை மேம்பட்டுள்ளதால் அச்சமின்றி பயணிக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த விரும்பியவர்கள் தோற்று விட்டார்கள். இது இன்று நிரூபணம் ஆகியுள்ளது. காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். மக்கள் வளர்ச்சியை விரும்புகின்றனர். தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர்” என்றார்.
கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் சையது ஆதில் உசைன் ஷா என்ற உள்ளூர்வாசி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை பரூக் அப்துல்லா சென்று பார்த்து ஆறுதல் கூறினார். “உங்களுக்கு எப்போதும் துணை நிற்போம்” என உறுதி அளித்தார்.