சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு வரும் 7-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
தொண்டை மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோயில். சுமார் 450 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்தவகையில், இந்தாண்டு சித்திரை பெருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, காலை 10 மணிக்கு அஸ்தமானகிரி விமான புறப்பாடு, நூதன புஷ்ப மாவடி சேவை நடைபெற்றது.
நாதஸ்வரம், தேவார இன்னிசை: 2-ம் நாளான நேற்று சூரிய விருத்தம், சந்திர பிறை நிகழ்வு நடந்தது. 3-ம் நாளான இன்று அதிகார நந்தி சேவையும், மே.5-ம் தேதி மகா அபிஷேகம், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே.7-ம் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. அதைத்தொடர்ந்து, இரவு 9 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரங்களுடன் சுவாமி தேரடியிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளுகிறார்.
8-ம் தேதி புஷ்ப விமானத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு திருக்காட்சி தருதல் நிகழ்வும், 9-ம் தேதி பிச்சாடனார் கோலத்தில் வீதி உலாவும், 10-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 11-ம் தேதி புஷ்ப பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. சித்திரை பெருவிழாவின் போது, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும், இரவு திருவீதி உலாவிலும் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், தேவார இன்னிசையும் நடைபெறுகிறது.
ஆதிபுரீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: இதேபோல், சிந்தாதிரிப்பேட்டை திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, நேற்று இரவு அங்குரார்ப்பணம் மற்றும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, சிம்ம வாகனம், ராவணேஸ்வரர் வாகனம், பூத வாகனம் வீதி உலாவும், அதிகார நந்தி சேவையும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ரத உற்சவம் மே 9-ம் தேதி நடக்கிறது.
12-ம் தேதி நடராஜர் உற்சவம், பஞ்சமூர்த்தி உற்சவம் தீர்த்தவாரி, திருக்கல்யாண ரிஷப வாகன சேவையும், 15-ம் தேதி ஸ்கந்தகிரி விமான சேவையும், 16-ம் தேதி சண்டேஸ்வரர் உற்சவமும், 17-ம் தேதி சமயாச்சாரியார் நால்வர் உற்சவமும் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.