மலையாள திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார். அவருக்கு வயது 49.
தமிழில் விக்ரம் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘காசி’. இந்தப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு பிரசாத். தொடர்ந்து மலையாளத்தில், ‘ரன்வே’,‘மாம்பழக்காலம்’, ‘பென் ஜான்சன்’, ‘லோகநாதன் ஐஏஎஸ்’, ‘லயன்’ என பல படங்களில் நடித்துள்ளார்.
இவர், கல்லீரல் பிரச்சினை காரணமாகக் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.30 லட்சம் தேவைப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தினர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த விஷ்ணு பிரசாத்துக்கு மனைவி மற்றும் அபிராமி, அனானிகா என்ற மகள்கள் உள்ளனர்.