சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.