அறிவியல் சார்ந்த நில வரைபட அடிப்படையில் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பது, சொத்து வரி நிலுவையை தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விகிதத்தை குறைப்பது உள்ளிட்டவை தொடர்பாக சட்டப்பேரவையில் 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சட்டப்பேரவையில் நேற்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் விவரம்: தீ தடுப்புக்கான செயல்பாட்டு நேரத்தை குறைக்க, அறிவியல் சார் நில வரைபடம் அடிப்படையில் புதிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தீயணைப்பு துறை சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.
எளிதில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ப, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வணிக, தொழில் உரிமங்கள் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி நிலுவையை தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விகிதத்தை ஒரு சதவீதத்தில் இருந்து அரை சதவீதமாக குறைக்கவும் அரசு உத்தேசித்துள்ளது. இதற்கு வகை செய்யும் நகர்ப்புற உள்ளாட்சி சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார்.
ஊரக உள்ளாட்சிகளில் விளம்பர பலகைகள், மின்னணு திரைகள் நிறுவுவதை முறைப்படுத்தும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார்.
நகர்ப்புற திட்டமிடல், போக்குவரத்து திட்டமிடலை ஒருங்கிணைக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் (கும்டா) உறுப்பினர் செயலரை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) பதவி வழி செயலராக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப, நகர ஊரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.
ஜிஎஸ்டி மன்றத்தின் 55-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார். மேலும், ஆவண பதிவில் மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்கும் வகையில், பதிவின்போது அசல் உரிமை மூல ஆவணம் தாக்கல் செய்யப்படுவதை கட்டாயமாக்குவதற்கான மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார்.
தொழில் புரிவதை எளிதாக்கும் வகையில், கடைகள், நிறுவனங்கள் தொடர்பான தொழிலாளர் சட்டங்களில் சிறை தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனைகளை குறைத்து, அபராதம் விதிப்பதை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தெரிவித்தார். இதுகுறித்து கருத்துகள், ஆலோசனைகள், திருத்தங்கள் கூற விரும்புவதாக டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வேல்முருகன் (தவாக), ஜி.கே.மணி (பாமக) அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) ஆகியோர் தெரிவித்தனர்.
பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பேரவையில் இன்று இந்த மசோதாக்கள் மீது உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.