புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீடு, அவர் வீட்டருகே கட்டியுள்ள அப்பா பைத்தியசாமி கோயில், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியிலுள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பல இடங்களுக்கு தொடர் மிரட்டல் விடுக்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும், மீண்டும் மிரட்டல்கள்: இந்நிலையில் இன்று (ஏப்.29) முதல்வர் ரங்கசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இம்மிரட்டல் இம்மாதத்தில் 2-வது முறையாக வருகிறது. அவர் வீட்டடுக்கு அருகே ரங்கசாமி கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் அங்கும் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல் பிரெஞ்சு தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இங்கும் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மிரட்டல் வந்து சோதனை நடந்தது. இச்சூழலில் ஜிப்மர் மருத்துவமனைக்கும் மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். ஜிப்மர் மருத்துவமனைக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்து சோதனை நடந்தது.
போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் மருத்துவமனை முழுவதும் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள், அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் முல்லா வீதியில் உள்ள குப்தா பள்ளி வாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்து சோதனை நடந்தது. மேலும் புதுச்சேரியில் தொடர் வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
‘திணறும் போலீஸ்’ – பொதுமக்கள் தரப்பில், “தொடர்ந்து புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, முதல்வர் ரங்கசாமி வீடு, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள்,நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள் என இம்மாதம் முழுக்க தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் தீயணைப்புத் துறைக்கு போனில் மிரட்டல் விட்டவரை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.
இதர இடங்களுக்கு இ-மெயிலில் தொடர்ந்து மிரட்டல் விடுபவரை பிடிக்க சைபர் க்ரைம் போலீஸார் முயற்சி எடுத்தனர். அதில் முடியாததால் மத்திய சைபர் க்ரைமை நாடினர். எனினும் தொடர்ந்து மிரட்டல் வருபவரை பிடிக்க, போலீஸார் உரிய விரைவான நடவடிக்கை எடுக்காததால் தவிப்புக்கு ஆளாகியுள்ளோம்.” என்றனர்.