திருப்பூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியின் 18-வது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர், நகராட்சி அலுவலகம் முன்பு இன்று (ஏப்.29) யாசகம் பெறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் நகர் மன்றத்தலைவர் நா.குமார் தலைமையில் இன்று நடந்தது. நகராட்சி ஆணையர் (பொ) பால்ராஜ், துணைத் தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டம் தொடங்கியதுமே, 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும், அதிமுக கவுன்சிலர் தங்கம் பேசும்போது, “எனது 18-வது வார்டுக்கு, பொது நிதியிலிருந்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். எப்போது நிதி கேட்டாலும் பொதுநிதி இல்லை என நகர்மன்ற நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் தற்போது 8 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனது வார்டு மட்டும் ஏன் புறக்கணிக்கப்படுகிறது? வார்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. இவற்றையெல்லாம் கண்டிக்கிறேன்.” என்று கூறினார். தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு யாசகம் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுவதாக கவுன்சிலர் தங்கம் தெரிவித்தார். தொடர்ந்து நகர்மன்ற வாசலில் அமர்ந்து யாசகம் பெற்று, சில்லரை காசுகளை துணியில் கட்டி நகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
அதேபோல் 3-வது வார்டு அதிமுக கவுன்சிலர் காயத்ரி மற்றும் 4-வது வார்டு கவுன்சிலரான அவரது கணவர் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து கூறும்போது, “எனது 3-வது வார்டு கிழக்கு தோட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இது தொடர்பாக நகராட்சியில் அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதேபோல் 4-வது வார்டில் தெருவிளக்கு, சாக்கடை உட்பட எந்த பணிகளையும் செய்யவில்லை. இதனால் நகர்மன்ற கூட்டத்தை புறக்கணிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் பார்வதி சிவகுமார் பேசும்போது, “நகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய வீட்டுமனை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சாக்கடை கால்வாய் வீட்டுமனை அளவில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற்றுவதற்கான எந்த சூழலும் அமைக்கப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் முழுமை அடையாமலேயே நகராட்சி சார்பில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சியிடம் கேட்டால் உரிய பதில் இல்லை.”என்றார்.