சென்னை: கோயில் திருவிழாக்களில் சாதிக்கு முக்கியத்துவம் தராமல், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் என்ற பெயரில் சாதி அடையாளம் எதுவுமின்றி விழாக்களை நடத்த வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா புதுப்பட்டி கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணியம்மன் கோயில் தேர் திருவிழாவில், பட்டியல் சமுதாய மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி இத்திருவிழாவை நடத்த அனுமதி வழங்கக்கோரி பெரியசாமி என்ற நீலவண்ணத்து நிலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் ஆஜராகி, “இந்த கோயில் தேர் திருவிழா வரும் ஏப்.6-ம் தேதி தொடங்கி ஏப்.10-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், பிற சமுதாய மக்களுக்கு விழாவை நடத்த அனுமதி வழங்கியிருப்பது போல இந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி விழாவை நடத்த அனுமதி வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்”, என வாதிட்டார்.
அப்போது, விழா அழைப்பிதழில் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அச்சிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, “கோயில் திருவிழாக்களில் சாதி சங்கங்களுக்கோ, தனிப்பட்ட நபர்களுக்கோ எந்த முன்னுரிமையும் அளிக்கக்கூடாது என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளதே?” என்றார்.
அதற்கு அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “பொதுவாக இனிவரும் நாட்களில் கோயில் திருவிழாக்களின் அழைப்பிதழ் மற்றும் நோட்டீஸில் சாதிப் பெயர்களை தவிர்க்க வேண்டுமென ஏற்கெனவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “கோயில் திருவிழாக்களில் சாதிக்கு இடமில்லை எனும்போது மனுதாரரின் கோரிக்கை துரதிர்ஷ்டவசமானது. கோயில் திருவிழாக்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதியினருக்கு ஒதுக்கும் நடைமுறையை அறநிலையத்துறை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழாவில் பங்கேற்க அல்லது நடத்த விரும்பும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் அல்லது உபயதாரர்கள் என்ற பெயரில் சாதி அடையாளம் எதுவுமின்றி விழாக்களை நடத்த வேண்டும்.
நோட்டீஸ் மற்றும் அழைப்பிதழிலும் அதுபோல சாதிப்பெயர்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நன்கொடை அளிப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினாலும் கூட அதிலும் சாதிப்பெயர்களை தவிர்க்க வேண்டும். யாரையும் தனிப்பட்ட முறையிலோ அல்லது சாதியை முன்னிலைப்படுத்தியோ கோயில் திருவிழாக்களை நடத்தவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ அறநிலையத்துறை அனுமதிக்கக்கூடாது”, என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.