சென்னை: பத்ரிநாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சரஸ்வதி புஸ்கரம் விழாவுக்கு தமிழக மக்களை அழைத்து செல்லும் வகையில், பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்-க்கு சிறப்பு ரயில் மே 8-ம் தேதி இயக்கப்பட உள்ளது.
இது குறித்து உத்தராகண்ட் மாநில சுற்றுலா நிறுவன மக்கள்தொடர்பு அதிகாரிகள் விரேந்திர சிங் ராணா, சுனில் ராஜூ (சென்னை) ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியது:“உத்தராகண்ட் சுற்றுலா கழகம், இந்திய ரயில்வே பாரத் கவுரவ் ரயில் சார்பில், சரஸ்வதி புஷ்கரத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து பத்ரிநாத், கேதர்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் சரஸ்வதி ஆறு ஓடுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் மே மாதத்தில் சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக பயணிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
16 நாட்கள் கொண்ட இந்த சிறப்பு ரயிலில் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், உத்தராகண்ட் மாநிலத்தின் பிற கோயில்களை தரிசிக்கலாம். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, மூன்றடுக்கு, இரண்டடுக்கு, முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் ஒருவருக்கு கட்டணம் ரூ.58,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி, தென்னிந்திய சைவ உணவு, பயண காப்பீடு, மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும்.
உத்தராகண்ட் சுற்றுலா கழகம் இணைந்துள்ளதால், பயணிகள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவார்கள். இந்த சுற்றுலா ரயில் தமிழகத்தில் இருந்து முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு www.tourtimes.in என்ற இணையதளம் மூலமாகவும், 7305858585 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம்” என்று அவர்கள் கூறினர்.இந்த சந்திப்பின்போது, டூர்டைமஸ் சவுத் ஸ்டார் திட்ட இயக்குநர் விக்னேஷ் உடன் இருந்தார்.